search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜேடிஎஸ் தொண்டர் கொலை"

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதள தொண்டரை கொலை செய்த குற்றவாளிகளை சுட்டுக்கொல்லும் படி முதல்வர் குமாரசாமி ஆவேசமாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Kumaraswamy
    பெங்களூர்:

    கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    சமீபத்தில் மந்திரி சபையை மாற்றி அமைத்ததால் திடீர் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சையை சமாளிப்பதற்குள் முதல்-மந்திரி குமாரசாமி மற்றொரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    கட்சி தொண்டர் ஒருவரை கொன்ற கொலையாளிகளை ஈவுஇரக்கமின்றி சுட்டுக் கொல்லுங்கள் என்று அவர் உத்தரவிடும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி இந்த சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    கர்நாடகா மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் முக்கிய நிர்வாகியாக திகழ்ந்தவர் கொன்னலாஹரே பிரகாஷ். இவர் நேற்று மாலை 4.30 மணிக்கு தனது காரில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவரது காரை 2 மோட்டார்சைக்கிளில் துரத்தியபடி 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஒரு இடத்தில் காரை மறித்து நிறுத்தி கொன்னலாஹரே பிரகாசை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினார்கள்.

    பிறகு 4 வாலிபர்களும் சேர்ந்து பிரகாசை உருட்டு கட்டைகளால் அடித்தனர். ரத்த வெள்ளத்தில் பிரகாஷ் அதே இடத்தில் சரிந்து விழுந்தார்.


    அவரை மாண்டியா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    பிரகாஷ் கொல்லப்பட்ட தகவல் முதல்-மந்திரி குமாரசாமிக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் யாருடனோ தனது செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது அவர், “பிரகாஷ் நல்ல மனிதர். அவரை ஏன் இப்படி கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை. கொலையாளிகள் மீது கொஞ்சமும் ஈவுஇரக்கம் காட்டாதீர்கள். கண்ட இடத்திலேயே சுட்டுக்கொன்று விடுங்கள். இதனால் எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறினார்.

    குமாரசாமி இவ்வாறு போனில் பேசிய தகவலை உள்ளூர் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தனது கேமிராவில் பதிவு செய்து இருந்தார். அந்த காட்சிகள் பெங்களூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதையடுத்து சமூக வலைதளங்களிலும் குமாரசாமி பேசுவது பரவியது.

    இதனால் குமாரசாமியின் பேச்சு வைரலாக உருவெடுத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை அறிந்ததும் முதல்-மந்திரி குமாரசாமி மீண்டும் அதிர்ச்சி அடைந்தார்.

    அவர் மீண்டும் நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், “குற்றவாளிகளை சுட்டுக்கொல்லும்படி நான் உத்தரவிடவில்லை. கட்சி தொண்டர் படுகொலை செய்யப்பட்டதால் உணர்ச்சி வசப்பட்டு பேசினேன்” என்று கூறி உள்ளார்.

    அவர் மேலும் கூறுகையில், “குற்றவாளிகள் ஜாமீனில் வந்து இந்த கொலையை செய்து உள்ளனர். அதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கூறி உள்ளேன்” என்றார்.  #Kumaraswamy #JDS
    ×